சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் சிறிது சாய்ந்தது.அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல்
சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத்தாங்கிப் பிடித்தார்.
அப்போது அவரது தலையிலிருந்த கொன்றை மலர் பூமியில் விழுந்து சுயம்பு லிங்கமாயிற்று. அதுவே இத்தலம். தேவர்களால்
வழிபடப்பட்டதால் தெய்வநாயகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன்
தெய்வநாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும்
மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்குஅரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று
இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது
தேவாரத்தலம் ஆகும்.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையினை சாய்த்து, கண்களை மூடி, கைகளால் சின் முத்திரை காட்டி,
அதைத் தன் யக்ஞோபவீதத்தின் ப்ரம்ம முடிச்சின் மேல் வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும், மறு கரத்தில் அக்க மாலையும் தாங்கி
இருக்கும் கோலத்தைக் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். குரு பெயர்ச்சி நாட்களில் பல்லயிரக்கணக்கான மக்கள் யோக
தட்சிணாமூர்த்தியின் அருளினைப் பெற்று பலனடைகின்றனர். அரம்பையர் அமைத்த அரம்பேஸ்வரர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில்
வீற்றிருந்து தன்னை வணங்குவோர்க்கு பதினாறு செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார்.
தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில்
நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக் கரைக்கு வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை
அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி
தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில்
வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா
மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப்
பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக்
கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் "இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார்.
அவரைக்குறித்து பதிகம் பாடு!' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல்
திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன் , தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை
குறித்து பதிகம் பாடினார்.